வாழியவே!
ஒல்காப் புகழ்கொண்ட புலவரவர் – தமிழ்
உலகம் போற்றிடும் அறிஞரவர்
தொல்காப் பியன்புகழ் பாடிவரும் – உலகத்
தொல்காப் பியமன்றம் வாழியவே!
கனடா மண்ணில் கிளையமைத்தோம் – தமிழ்க்
கற்றவர் ஏற்றிடப் பணிபுரிவோம்!
மனதாயத் தமிழர் வாழ்வியலைத் – தமிழ்
மாணவர் கற்றிட வழிசமைப்போம்!!
கற்றதை மற்றவர் அறிந்திடவே – எங்கள்
கனடாக் கிளைவழி செய்துதரும்
பற்றுடன் நாம்செய்யும் தொண்டுகளால் – இந்தப்
பாரினிற் தமிழ்மொழி வீறுபெறும்!
பண்டைத் தமிழரின் வாழ்வுதனை – நன்கு
படம்பிடித் தழகாய்த் தங்தவரே!
மண்டலம் உன்பணி போற்றுதையா – இந்த
மாநிலத் தமிழினம் வாழ்த்துதையா!!
எழுத்துச் சொல்பொருள் எனவகுத்துத் – தமிழ்
இலக்கணம் செய்து தந்தவனாம்
பழுத்த முதுபெருஞ் சான்றோனாம் – தொல்
காப்பிய னார்புகழ் வாழியவே!
ஒன்பது இயல்களிற் தமிழரது – வாழ்வின்
உண்மைகள் யாவையும் பொதியவைத்து
மன்பதை போற்றிடும் நூலாக – ஆக்கி
வழங்கிய ஆசான் வாழியவே!!
***
பாடல் வரிகள்: சபா. அருள்சுப்பிரமணியம்
பாடியவர்: திருமதி நிசாந்தன் மதுராங்கி
வீணை: திருமதி மஞ்சு கீதா ஜெயதீஸ்
மிருதங்கம் தபேலா: விமல் சங்கர்
முகர்சிங்: ச. சத்தியஜித்
கீபோட்: முரளி
இசையமைப்பு: முரளி
ஒலிப்பதிவு: யாழ். ஸப்தமி கலையகம்