அமரர் திரு. சபா அருள்சுப்பிரமணியம்

முனைவர். செல்வநாயகி ஸ்ரீதாஸ்

தோற்றம், வாழ்வு, மறைவு. இவற்றிற்கு இடைப்பட்ட காலப் பகுதி தான் எமது வாழ்க்கையாக அமைகிறது. பெருமை பேசிக் கொள்வதும், பகைமை பாராட்டுவதும், முடிந்தால் அன்பும் பண்பும் கருணையும் மிக்க வாழ்க்கையை நடாத்தி, நாம் வாழும் சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாக இருப்பதும், இது தான் வாழ்க்கை.

தமிழ் மக்களால் அறியப்படும் புராணக் கதைகளில், எனது பார்வையில், வாழ்வியல் தொடர்பான, மிகவும் ஆழமான பொருள் கொண்ட கதை “சித்திரபுத்திரனார் கதை”. இக் கதைக்கும் இதனை நான் இங்கு குறிப்பிடுவதற்கும் தர்க்கரீதியான தொடர்பு எதுவும் இல்லை. தவிரவும், இது, இக் கதையின் உண்மைத்தன்மை பற்றியதும் அல்ல. சித்திரபுத்திரனார் என்னும் கணக்குப் பதிவாளர் (Book keeper/ Registrar) பார்வையிலிருந்து எவருமே,  எதுவுமே விடுபட்டுப் போகாது. மனச்சாட்சி உள்ள ஒவ்வொரு மனிதனும் “சித்திரபுத்திரனாருக்குக்” கணக்குக் கொடுத்தே ஆகவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே வாழ்கிறான்.

நாம், வாழும் நாட்களில் எம்மை, எமது குடும்பத்தை மட்டுமல்ல, எம்மைச் சூழவுள்ள, எம்மைச் சார்ந்த, எம்மைச் சாராத, மனிதருக்கு, எமது இனத்திற்கு, நாம் வாழும் உலகுக்கு நாம் என்ன செய்தோம் என்பதைத் தீர்மானிப்பது  வாழும் காலத்தில் நாம் ஆற்றிய பணிகளே, நாம் இறந்த பின் உலகம் போற்ற, நாலு பேர் நம்மைப் பற்றிச் சிறப்பாகப் பேசுவதற்கு நாம் ஏதாவது விட்டுச் செல்ல வேண்டும்.

எனது மாணவன், திரு. அருள் சுப்பிரமணியம் அவர்கள் எதனை விட்டுச் சென்றார் என்பதை நான் கூறாமலே சமூகம் அறியும். அருள், 2010 ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதுகலைப் பிரிவில் அண்ணாமலைக் கனடா வளாகம் ஊடாக இணைந்து கொண்டார்.  இவர் முதுகலைப் பிரிவில் இணைந்து கொள்ளும் முன்பாகவே இவர் பற்றி என்னுள் ஒரு அபிப்பிராயம் இருந்தது. சாதாரணமாக, மாதகல் போன்ற பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள், பாலபண்டிதர் படிப்பை முடித்துக் கொண்டு வருவதால் அவர்கள், ஏனைய மாணவர்களை விடத் தமிழ் இலக்கணத்தில் சிறப்பாக இருப்பார்கள் என்பது எனது நீண்ட கால அனுபவம். எனது மதிப்பு தவறாகவில்லை. அருள், இலக்கணத்தில் சிறப்பாக இருந்தது மட்டுமல்லாமல் ஏனைய பாடங்களையும் மிக்க ஆர்வத்துடன் படித்தார். எந்த வகுப்பையும் தவற விட்டது கிடையாது. காலத்தை விரயம் செய்யாது கற்றதை ஆழமாகக் கற்றுச் சமூகத்துடன் அதனைப் பகிர்ந்து கொண்டார்.

முதுகலைப் பட்டப் படிப்பை முடித்துக் கொண்டதுடன் தனது எதிர்காலத்தைக் குறிக்கோளுடன் வகுத்துக் கொண்டார். “எப்படியும் வாழலாம்” என்று நினைப்பவர்கள் ஒரு சாரார். அருள், தனது வாழ்க்கை இப்படித்தான் அமையவேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். அவரது விடாமுயற்சியும் அவரது மனைவியின் அனுசரணையும் இணைந்து அவரது வெற்றிகரமான சாதனைகளுக்கு வழிவகுத்தன. “ஒரு மனிதனது சாதனைகளின் பின்னால் அவன் மனைவி இருப்பாள்” என்பது அருளின் விடயத்தில் மிகவும் சரியாகப் பொருந்தியது. மனமொத்த தம்பதியரின் இணை முயற்சியால் தொடக்கப்பட்ட “தமிழ்ப் பூங்கா” என்னும் தமிழ் பாடசாலை, தொடர்ந்தும் சிறப்பாக இயங்கி வரும் என்பது எமது நம்பிக்கை. இவரது வாழ்க்கை இன்னும் பலருக்கு முன் மாதிரியாக அமையும்.

அவரது மனைவி யோகா அருள்சுப்பிரமணியம் அவர்கள், கணவன் உயிரோடு இருக்கும் போதே அவரது நூல்களை வெளியிட்டு விடவேண்டும் என்னும் அயராத முயற்சியால் இந்தப் பேரிடர் காலத்திலும் அதனை வெற்றிகரமாகச் சாதித்து முடித்தார்.

திரு. அருள் சுப்பிரமணியம் அவர்களது  ஆத்மா சாந்தியடைய இறைவனை வழிபடுகிறேன்.

“தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று
.”
– திருக்குறள், நூ. 236.

 

                    

You may also like...