அமரர் திரு. சபா அருள்சுப்பிரமணியம் அவர்கள் நினைவாக

அமரர்
திரு. சபா அருள்சுப்பிரமணியம்
தோற்றம்: 17-02-1944
மறைவு: 09-10-2021
அறிவார்ந்த தமிழாசான் அருள்சுப்ர மணியம்பேர்
   அடக்கத்தின் உருவானவர் - செயல்
      ஆற்றலில் திருவானவர்
நெறிநின்று பணிசெய்த நிறைவோடு எமைவிட்டு
   நிமலனடி சேர்ந்துவிட்டார் - எம்கண்
      நீர்சோர நீங்கிவிட்டார்! 

பழகுதற் கினியவர், பண்போடு வாழ்ந்தவர்
   பற்றான தமிழ்ப்பாவலர்! - சிறார்
      படிப்பிற்குப் பெருங்காவலர்!
இழகியநல் லுளத்தொடு இனியதொரு நட்போடு
   இருந்தவர் எங்குசென்றார்! – காலன்
      இவரையேன் கொண்டு சென்றான்!

முத்தாக ஒளிவீசும் முறுவலோ டெப்போதும்
   முகம்பூத்து உறவானவர்! - இனிய
      மொழியாலே உணர்வானவர்!
சத்தான பலநூல்கள் தமிழன்னை முடிமீது
   சொத்தாக்கி வைத்த கவிஞர் - பழச்
      சுவையூட்டித் தந்த கலைஞர்

நறுந்தமிழ்ப் பூங்காவும் நன்னீரைக் காணாது
   நலிந்துபோய் வாடுதம்மா – ஒளி
      ஞாயிறைத் தேடுதம்மா!
இருந்தமிழ்த் தொல்காப் பியமன்றும் தலைவனை
   இழந்தின்று போனதம்மா - சிறகு
      இழந்தபுள் ளானதம்மா!

ஞாலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தஆ சானுக்கெந்
   நாளுமோர் மரணமில்லை – அவர்
      ஞாபகம் மறைவதில்லை
காலத்தின் வேகத்தைக் கருத்தோடு அவர்தந்த
   கருவூலம் எதிர்த்துநிற்கும் - அவர்
      கதைசொல்லி நிலைத்துநிற்கும்!

துணைநின்ற மனையாளும் தொடர்கின்ற சுற்றமும்
   துயர்நீங்கி மீண்டு வருக! – வலி
      துடைக்கின்ற வலிமை பெறுக!
அணையாத தீபமாய் அருள்சுப்ர மணியமும்
   ஆண்டவன் பாதமடைக! – அங்கு
      அவரான்மா சாந்திபெறுக! 

ஆக்கம் - மாவிலி மைந்தன்

எமது தொல்காப்பிய மன்றத்தின் தலைவர் திரு. சபா அருள்சுப்பிரமணியம் M.A. அவர்கள், இத்துணை விரைவில் எம்மை விட்டுப் பிரிந்து போவார் என்று நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. அவரின் மறைவு எமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது. கோவிட் நோய்ப் பரம்பலால் உலகமே தனிமைப்பட்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில் அவரை இழந்து பேரதிர்ச்சியிலும் ஆற்றொணாத் துயரத்திலும் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உடன் பிறப்புகள், உறவினர், நண்பர்கள் எல்லோருடனும் எமது துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். அவரின் ஆன்மா இறைவனடியில் அமைதியடைய இறைவனை வேண்டுவோமாக!

ஆழ்ந்த இரங்கலுடன்,
தொல்காப்பிய மன்றம் – கனடா
11 ஒக்ரோபர் 2021

You may also like...